சச்சின் கூறிய ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கபில் தேவ்


ஒரு நாள் போட்டிகளை காப்பாற்றும் விதத்தில், சச்சின் கூறிய ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், முன்னாள் வீரர் கபில் தேவ். "டுவென்டி-20' கிரிக்கெட் போட்டிகளின் அசுர வளர்ச்சி காரணமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் போட்டிகளை மீட்க, புதிய பார்முலா ஒன்றை இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அறிவித்தார். இதன் படி,மொத்தம் உள்ள 100 ஓவர்களை, நான்கு பகுதிகளாக பிரித்து தலா 25 ஓவர் வீதம் போட்டிகளை நடத்தலாம். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்பு அதிகரிக்கும் என சச்சின் ஆலோசனை தெரிவித்திருந்தார். இதற்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் கபில் தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: டெஸ்ட், ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' என கிரிக் கெட்டின் மூன்று பரிமாணங்களுக்கும் தனிப்பண்புகள் உண்டு. அவற்றை மாற்றி அமைத்து அதன் அடிப்படை தன்மையை குலைக்க வேண்டாம். இதனால் கிரிக் கெட்டின் பாரம்பரியமே பாதிக்கப்படும். கிரிக்கெட் போர்டுகளும், சர்வதேச கிரிக்கெட் கவுன் சிலும், கிரிக்கெட் வீரர்களும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் நடைமுறையை மாற்றுவது ஆபத்தானது. சச்சினின் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் பலரும், பலவிதமான ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் கிரிக்கெட்டுக்கு எது நல்லது என்பதை புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கபில் தெரிவித்தார்.

ஐ.சி.சி., மறுப்பு: சச்சினின் ஆலோசனைக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) பெரிதாக எந்த "ரியாக்ஷனும்' காட்ட வில்லை. ஒரு நாள் போட்டிகளில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

ஆபத்து இல்லை: ஒரு நாள் போட்டிகளுக்கு ஆபத்து இல்லை என்கிறார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இது குறித்து அவர் கூறுகையில், "டுவென்டி-20' போட்டிகள், பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் ஒரு நாள் போட்டிகள் தரத்தை இழந்து விடவில்லை. உலககோப்பை (50 ஓவர்) போட்டிகளுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. டெஸ்ட், ஒரு நாள், "டுவென்டி-20' என ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உண்டு. டெஸ்ட் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் "டுவென்டி-20' போட்டிகள் பொழுது போக்கு நிறைந்தவை என்பதே எனது கருத்து,'' என்றார்.

ஜோன்ஸ் ஆதரவு: சச்சின் பார்முலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதிய ஆலோசனை தெரிவித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ். இது குறித்து அவர் கூறுகையில்,"" ஒரு நாள் போட்டிகள் அழிவை நெருங்கிக் கொண்டுள்ளன. முதலில் 50 ஓவர் போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்க வேண்டும். தவிர, தலா 20 ஓவர் வீதம் நான்கு இன்னிங்ஸ்களாக போட்டிகளை நடத்த வேண்டும். இதன் மூலம் விறுவிறுப்பை அதிகப்படுத்த முடியும்,'' என்றார்.

பரபரப்பான முதலாவது ஓருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி "திரில்' வெற்றி


பரபரப்பான முதலாவது ஓருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
பெர்குசன் அபாரம்: ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் வாட்சன் (46) நம்பிக்கை தந்தார். பின்னர் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஒயிட் ஜோடி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் கடந்த ஒயிட் (53) ரன் அவுட்டானார். கிளார்க் 45 ரன்கள் எடுத்தார். மைக்கேல் ஹசி (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய பெர்குசன் அரைசதம் கடந்து அசத்தினார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பெர்குசன் (71), ஹோப்ஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

"டெஸ்ட்' போபரா: சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் (12) ஏமாற்றம் அளித்தார். படுமந்தமாக ஆடிய போபரா, 88 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு ஓவைஸ் ஷா (40) ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் கைகொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி திணறியது.ஒன்பதாவது வீரராக களமிறங்கிய ரஷித், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவருக்கு சைடு பாட்டம் ஓரளவுக்கு கைகொடுத்தார்.

6 பந்தில் 13 ரன்: கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. பிராக்கனின் முதல் பந்தில் ரன் எடுக்காத ரஷித், அடுத்த பந்தில் பவுண்டரி அடித் தார். அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுக்கப் பட்டது. கடைசி 2 பந்தில், 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 3 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் (31), சைடு பாட்டம் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.