பரபரப்பான முதலாவது ஓருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி "திரில்' வெற்றி


பரபரப்பான முதலாவது ஓருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
பெர்குசன் அபாரம்: ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் வாட்சன் (46) நம்பிக்கை தந்தார். பின்னர் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஒயிட் ஜோடி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் கடந்த ஒயிட் (53) ரன் அவுட்டானார். கிளார்க் 45 ரன்கள் எடுத்தார். மைக்கேல் ஹசி (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய பெர்குசன் அரைசதம் கடந்து அசத்தினார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பெர்குசன் (71), ஹோப்ஸ் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

"டெஸ்ட்' போபரா: சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் (12) ஏமாற்றம் அளித்தார். படுமந்தமாக ஆடிய போபரா, 88 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு ஓவைஸ் ஷா (40) ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் கைகொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி திணறியது.ஒன்பதாவது வீரராக களமிறங்கிய ரஷித், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவருக்கு சைடு பாட்டம் ஓரளவுக்கு கைகொடுத்தார்.

6 பந்தில் 13 ரன்: கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. பிராக்கனின் முதல் பந்தில் ரன் எடுக்காத ரஷித், அடுத்த பந்தில் பவுண்டரி அடித் தார். அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுக்கப் பட்டது. கடைசி 2 பந்தில், 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 3 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் (31), சைடு பாட்டம் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
0 Responses

Post a Comment